நியூஸ்

சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற ராஜபக்சேவை விமான நிலையத்தில் பொதுமக்கள் சுற்றி வளைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்…!

இலங்கை பிரதமராக இருந்த ராஜபக்சேவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்ததை தொடர்ந்து அவர் விமானம் மூலம் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயற்சிகள் மேற்கொண்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து விமான நிலையம் அருகே குவிந்துள்ள போராட்டக்காரர்கள், ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்துவருகின்றனர்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், உணவு பொருட்கள் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றைய தினம் போராட்டக்காரர்கள் மீது ஆளுங்கட்சி ஆதரவு குண்டர்கள் தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது.

எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதையடுத்து மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதிபர் கோத்தபயாவும் ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டம் தொடர்கிறது. இதற்கிடையே அம்பன்தோட்டாவில் உள்ள மகிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் பரம்பரை வீடு தீவைத்து எரிக்கப்பட்டது.

ஆளுங்கட்சி எம்பிக்கள் வீடுகளும் சூறையாடப்பட்டு வருகிறது. போராட்டத்தில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

ராஜபக்சே சகோதரர்களின் தந்தை டி.ஏ. ராஜபக்சேவின் நினைவிடத்தையும் வன்முறையாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

ராஜபக்சே சகோதரர்களுக்கு ஆதரவாக இருந்ததாக கூறப்படும் புத்த அமைப்பும் போராட்ட காரர்களுக்கு ஆதரவாக உள்ளது.

கோத்தபய ராஜபக்சேவும் ராஜினாமா செய்ய வேண்டும் என அந்த புத்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

உயிருக்கு அச்சம் உள்ள காரணத்தால், அலரி மாளிகையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் மகிந்த ராஜபக்சே வெளியேறினார்.

அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்லவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக ரத்மலான விமான நிலையம் அமைந்துள்ள சாலை அருகே ஏராளமான போராட்டக்காரர்கள் குவிந்துள்ளனர்.

ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிடக்கூடாது என்பதால் விமான நிலையத்தை நோக்கி வரும் அனைத்து வாகனங்களையும் அவர்கள் சோதனையிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button